தென் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், நேற்று நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பொழிந்தது. காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியிலும் சுமார் இரண்டு மணி நேரம் பரவலாக மழை பொழிந்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இடிமின்னலுடன் கனமழை பொழிந்து வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, வாய்மேடு, கரியாப்பட்டினம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருவதால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் இரவு முதல் தொடர்ந்து கன மழை பொழிந்து வருகிறது. நன்னிலம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடரும் மிதமான மழையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இந்நிலையில்தான் தென் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது ரெட் அலர்ட்டாக அதை மாற்றி அறிவித்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். ராமநாதபுரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 25 செமீ மழை பதிவாகி இருந்தது.
பிற்பகலை ஒப்பிடும்போது தற்போது சற்றே மழை குறைந்திருந்தாலும் கூட, வரக்கூடிய நேரங்களில் மழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.