கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் விசாரணை அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவருகின்றன. அதன்படி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர் வீட்டிற்கு சென்றவர்களும் கள்ளச்சாராயம் குடித்து பலியானது அம்பலமாகியுள்ளது.
சம்பவத்தில், கருணாபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கள்ளச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்துள்ளார். பின் சுரேஷின் இறுதி சடங்கிற்கு சென்றவர்களும் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். முதலில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்தே மற்றவர்களும் கள்ளச்சாராயம் குடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 18 இரவு 11 மணிக்கு பிரவீண் என்பவர் விஷச்சாராயம் குடித்துள்ளார். நள்ளிரவு 12.30 மணிக்கு அவரது உடல்நலம் பாதிக்கப்படுகிறது. வயிறுவலி, கண்பார்வை எரிச்சல் போன்றவை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பிரவீனை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பிரவீணை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், பிரவீன் மது அருந்தி இருப்பதால் சிகிச்சை அளிக்க முடியாது என கூறி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். உடல்நலம் எதனால் பாதிக்கப்பட்டது என்பதை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்திருந்தால் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை தடுத்திருக்கலாம் என அக்குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
பிரவீன் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில், ஜுன் 19 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு பிரவீணின் உறவினர் சுரேஷும் விஷச்சாராயம் குடித்துள்ளார். அதிகாலை 4 மணிக்கு சுரேஷூக்கு வயிறு வலி, பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சுரேஷை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாலும் 7 மணிக்கு சுரேஷ் உயிரிழக்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட 8 மணியளவில் பிரவீணும் உயிரிழக்கிறார். இப்படி ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழக்கின்றனர்.
இருவரது சடங்களும் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட நேரத்தில் மற்றவர்கள் இந்த துக்க நிகழ்வுகளுக்காக வந்தனர். அப்போதும் இருவரது குடும்பத்தை சார்ந்தவர்களும், இருவரது மரணங்களும் விஷச்சாராயத்தால் ஏற்பட்டது என ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றனர். ஊடகங்களுக்கு தாங்கள் தெரிவித்த வேளையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விழித்திருந்தால் நிச்சயமாக உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் என அந்த குடும்பத்தினர் குற்றம் சுமத்துகின்றனர்.
இதில் அலட்சியப் போக்கு எந்த அளவிற்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பது விசாரணையின் போதே தெரியவரும். தற்போதைக்கு இந்த அலட்சியப்போக்கு மொத்தம் 35 உயிர்களை காவுவாங்கியிருக்கிறது.
இந்த சூழலில்தான், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.