விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும், கள்ளச்சாரயம் குறித்த புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண் 10581-ஐ பிரபலப்படுத்த வேண்டும், ஒவ்வொரு மாவட்ட மதுவிலக்கு உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் புகாருக்கான வாட்ஸ் அப் எண்களை அறிவிக்க வேண்டும், இதன் மூலம் பெறப்படும் புகார்கள் மீதான நடவடிக்கை குறித்து மதுவிலக்கு அமலாக்கத்துறை கூடுதல் டிஜிபி கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
மேலும், இந்த நடவடிக்கைக்கான வார அறிக்கையை ஒவ்வொரு திங்கள்கிழமையும் உள்துறை செயலர் மூலம் முதலமைச்சர் அலுவலகம் அனுப்ப வேண்டும், பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் கள்ளச்சாராயத்தின் தீமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாராந்திரக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், முதலமைச்சரின் உத்தரவை கடுமையாக கடைபிடிக்காத காரணத்தினாலும், காற்றில் பறக்க விட்டதாலும் மீண்டும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபோல் இனி நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும், இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க வேண்டியதும் அவசியம்.