கடந்தாண்டு மே மாதத்தில் விழுப்புரத்தில் விஷச்சாராய மரணங்கள் நிகழ்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்போது 20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தனர். அந்த நிகழ்வுகள் நிகழ்ந்த அடுத்த 4 நாட்களுக்குள் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த 3,762 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 94,560 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் விஷச்சாராயம் தமிழ்நாட்டில் உயிர்ப்பலிகளை வாங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் எல்லாம், கடந்தாண்டு நடந்ததைக் குறிப்பிட்டு, அப்போதே உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இப்போது இத்தகைய விபரீதங்கள் நிகழ்ந்திருக்காது எனத் தெரித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டின் விவகாரத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரித்தார்.
பேரவையில் பேசிய அவர், “கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியதால் பலர் உடல்நலம் பாதிப்படைந்தனர் என்ற தகவல் கிடைத்தது. உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகளை செய்திட அறிவுறுத்தினேன்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜ் என்கிற கன்னுக்குட்டி என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 200 மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய தாமோதரன், மதன், விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களோடு தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இதேபோன்ற சம்பவம் ஒன்றை அரசு சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது. அந்த வழக்கு இரு மாவட்டங்கள் தொடர்புடையது. அதில் விழுப்புரத்தினைப் பொருத்தவரை 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
8 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை அலுவலர்கள் 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் மெத்தனால் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு வழக்கைப் பொருத்தவரை 6 வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 6 காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது” என தெரிவித்தார்.