கடனை வசூலிக்க மூன்றாம்தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை காட்டம்

கடனை வசூலிக்க மூன்றாம்தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை காட்டம்
கடனை வசூலிக்க மூன்றாம்தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை காட்டம்
Published on

கடனை வசூலிக்க மூன்றாம்தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், 'வளர்ந்து வரும் நவீன காலத்தில் செல்போன் அனைவரும் பயன்படுத்தக்கூடிய சாதனமாக உள்ளது. செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த செயலிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. கடன் பெறுவதற்கான, பல்வேறு செயலிகள் புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. செல்போன் செயலி மூலம் கடன் பெறுபவர்களிடம் அதிகபடியான வட்டி வசூலிக்கப்படுகிறது. செல்போன் செயலிகள் மூலம் கடன் தரும் அவர்கள் எந்தவிதமான சட்ட திட்டங்களையும் பின்பற்றுவது இல்லை. 

வாங்கிய கடன்களை சரியாக செலுத்தவில்லை எனில், அவர்களின் புகைப்படங்களை வாட்ஸ்-அப் செயலியில் உள்ள உறுப்பினர்களுக்கு பகிர்வது, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தவறாக பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக, கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்குச் செல்கின்றனர்.

கூகுள் செயலி மூலம் பஜாஜ்பின்சர்வ், கேப்பிடல் ஃபர்ஸ்ட், கேஸ் இ, ஸ்மார்ட் காயின் உட்பட 50க்கும் மேற்பட்ட செயலிகள் இதுபோன்ற கடன்களை வழங்கி வருகின்றன. இவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்த செயலியில் கடன் பெற்ற ஆந்திராவை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இவ்வகை செயலி மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

கடன் வழங்கும் பல செயலிகள் சீனா நாடுகளோடு கூட்டு வைத்து மறைமுகமாக செயல்படுவது தெரிய வருகிறது. இதனால் கடன் வழங்கும் செயலிகள் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் ரிசர்வ் வங்கி இணையதளம் மற்றும் செயலி மூலம் கடன் வழங்குபவர்களை முறைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்ட விரோதமாக செயல்படும் கடன் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, 'தற்போது செயலிகள் மூலம் கடன் பெற்று தற்கொலை செய்து கொள்வது இந்தியாவின் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. செயலிகள் மூலம் கடன் பெறுவதில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 1) செயலி மூலம் கடன் வழங்குபவர்கள் அவர்களுக்கான விதிமுறைகளை அவர்களே உருவாக்கியுள்ளனர். 2) கடனை வசூல் செய்வதில் அங்கீகரிக்க முடியாத முறைகளை பின்பற்றுகின்றனர்.

இவை இரண்டும் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவது இல்லை. சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலும் இல்லை. கடனை வசூலிக்க மூன்றாம்தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்க இயலாது” எனத் தெரிவித்தனர். தொடர்ந்து, மனுதாரரின் தகவலின் அடிப்படையில் இது போல கடன் வாங்குவோர் மூலமாக சமூக விரோதக் கூறுகள் நாடுகளுக்குள் உட்புகும் வாய்ப்பிருக்கலாம் எனத் தோன்றுகிறது என குறிப்பிட்டனர்.

தொடர்ந்து, இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர், கூகுள் நிறுவனம் மற்றும் மத்திய நிதித்துறைச் செயலர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com