இபிஎஸ்-ன் அதிமுக மாநாட்டில் சட்டவிரோதமாக பேனர்கள், கட்அவுட்டுகள்?

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், மதுரையில் இன்று நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு அரசியல் விமர்சகர்களால் உற்றுநோக்கப்படுகிறது.

மதுரை வலையாங்குளம் பகுதியில் அதிமுக-வின் பொன்விழா எழுச்சி மாநாட்டை இன்று காலை கொடியேற்றி தொடங்கி வைக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து மாநாட்டு பந்தலை திறந்து வைத்து அதிமுக-வின் புகைப்பட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிடுகிறார்.

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு
பிரம்மாண்ட டிஜிட்டல் திரை முதல் 1.25 லட்சம் நாற்காலிகள் வரை... மதுரை அதிமுக மாநாட்டின் சிறப்புகள்!

இம்மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு உணவு சமைப்பதற்காக நூறு டன் அரிசி, 20 ஆயிரம் கிலோ காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மதுரை மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பசியாற்றுவதற்காக, சாம்பார் சாதம், தயிர் சாதம், புளியோதரை, லெமன் சாதம், வெஜ் பிரியாணி உள்ளிட்ட சைவ உணவுகள் தயாரிக்கப்பட உள்ளது.

இதற்கான சமையல் பணிகளில் ஐந்தாயிரம் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சமையலுக்காக, ஐந்தாயிரம் கிலோ தக்காளி வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், அவரைக்காய், சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு என மொத்தம் 20,000 கிலோ காய்கறிகள் கொண்டுவரப்பட்டு நறுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மாநாட்டிற்காக சட்டவிரோதமாக கட் அவுட்டுகளும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் வா.புகழேந்தி காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளார். இதற்கிடையே அதிமுக மாநாட்டில் கருப்பு பணப்புழக்கம் இருப்பதாக தென்மண்டல ஐஜியிடம் சீர்மரபினர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு காவல்துறை தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு கூலிப்படையினர் அழைத்து வரப்படுவதாகவும் இதனால் சட்டம் ஒழுங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com