சென்னை அரசுப்பள்ளி ஆசிரியை நிவேதிதாவை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் கைதான தீயணைப்புத் துறை வீரர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த 47 வயதான அரசு பள்ளி ஆசிரியை நிவேதிதா. கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், 29 வயதான தனது காதலர் இளையராஜா என்பவரால் கார் ஏற்றிக் கொல்லப்பட்டார். நிவேதிதாவின் இரண்டாவது காதலரான சென்னை கொளத்தூர் கணபதிக்கு, இளையராஜா வைத்த குறி தவறியதில், ஆசிரியை கார் ஏற்றிக் பரிதாபமாக கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், சென்னை அண்ணாநகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட கோவை தீயணைப்புத்துறை வீரர் இளையராஜா, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விசாரணை கைதிகளுக்கான புழல் சிறை பிரிவு இரண்டில் அடைக்கப்பட்டிருந்த இளையராஜா, இன்று காலை கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அங்கு, கழிவறை ஜன்னலில், கைலி மூலம், தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருக்கிறார்.
இதையறிந்த சக கைதிகள், சிறைக்காவலர்கள் அவரை மீட்டு, புழல் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக புழல் சிறை மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிபடுத்தினர். இதனைத்தொடர்ந்து, ஆசிரியை நிவேதிதாவை கார் ஏற்றிக்கொன்ற தீயணைப்புத்துறை வீரர் இளையராஜாவின் உடல், உடற்கூறு ஆய்விற்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறையில் தற்கொலை செய்து கொண்ட தீயணைப்புத்துறை வீரர் இளையராஜாவுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வேறொரு பெண்ணோடு திருமணமாகி, 8 மாத கைக்குழந்தை உள்ளது.