ஐஐடி இட ஒதுக்கீட்டில் ஏற்கெனவே உள்ள சட்டத்தை அமலாக்கம் செய்ய வேண்டும் என மதுரை எம்பி. சு.வெங்கடேசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு மீறல்கள் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், இராம் கோபால் ராவ் குழு வரம்பு மீறி எதிர்மாறான வேலையை செய்திருக்கிறது. உடனடியாக அந்த அறிக்கையை நிராகரித்து இட ஒதுக்கீட்டு அமலாக்கத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எழுதியிருந்தார்.
அதற்கான 02.08.2021 தேதியிட்ட பதில் கடிதம் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இடம் இருந்து வந்துள்ளது, அதில், ஐ.ஐ.டி நிலைக் குழுவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கடிதத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை நிலைக்குழுவும் தனது பரிந்துரைகளை இறுதி செய்யும்போது இக்கருத்துக்களை கணக்கில் கொள்ளுமென்றும் தெரிவித்து பதில் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் பதில் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சு.வெங்கடேசன், “சட்டம் ஏற்கெனவே உள்ளது. அதன் அமலாக்கம் மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும். இந்த கல்வியாண்டும் கடந்து போய் விடக் கூடாது. சமூக நீதி உறுதி செய்யப்பட வேண்டும்.
ஐஐடியில் ஓ.பி.சி, எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கான சட்ட ரீதியிலான உரிமைகள் கைவசமாக வேண்டும். ஆசிரியர் நியமனம், மாணவர் அனுமதி இவை இரண்டிலுமே வேண்டும்” என கூறியுள்ளார்.