“ஆட்டை கடித்து, மாட்டை கடித்து ஆட்சியரை கடித்த பொன்.மாணிக்கவேல்”-சுவாரசியமான கதை

“ஆட்டை கடித்து, மாட்டை கடித்து ஆட்சியரை கடித்த பொன்.மாணிக்கவேல்”-சுவாரசியமான கதை
“ஆட்டை கடித்து, மாட்டை கடித்து ஆட்சியரை கடித்த பொன்.மாணிக்கவேல்”-சுவாரசியமான கதை
Published on

ரயில்வே காவல்துறை மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல், தனது பணியில் இருந்து நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி சென்னை அயனாவரத்தில் அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ரயில்வே காவல்படையின் சென்னை மண்டல முதன்மை ஆணையர் லூயிஸ் மற்றும் பல ரயில்வேத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழாவில் கலந்துகொண்டு பேசிய பொன்.மாணிக்கவேல் பணியின்போது பெற்ற பல சுவாரஸ்யமான அனுபவங்களை ரயில்வே காவலர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரால் முடித்துவைக்கப்பட்ட வழக்கை ஆராய்ந்து, இறந்தவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நிரூபித்த சுவாரசியமான கதையை விவரித்தார் ஐ.ஜி பொன் மாணிக்கவேல்.

“ பல ஆண்டுகளுக்கு முன் கூடி போதையில் இருந்த நபர் ஒருவர், மலை பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, அவரது 13 மாத குழந்தையையும் தாக்கியுள்ளார். தடயங்களை அளிப்பதற்காக இருவரையும் நெருப்பை மூட்டி எரித்து கொன்றுவிட்டு தப்பித்தார். வழக்கை விசாரித்த காவல்துறையினர் இருவரும் நெருப்பை ஏற்றி தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அதன் புகைப்படம் மற்றும் காட்சிகளை கண்டு விசாரித்த பொன்.மாணிக்கவேல், உரிய குற்றவாளியை கண்டறிந்து, அவரை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்று உண்மையை எடுத்து சொல்லுமாறு கூறியுள்ளார்.

சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு ஆட்சியரை அழைத்தபோது, ஆட்சி அதிகாரத்தில் இருந்த மாவட்ட ஆட்சியரே பயந்து தயக்கம் காட்டியதாக தெரிவித்தார். பின்னர் துணை ஆட்சியர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சி அடிப்படையில் குற்றவாளி இன்றும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த சம்பவம் அறிந்த அப்போதைய காவல்துறை ஐ.ஜி, உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மாவட்ட ஆட்சியரயே கடித்து விட்டாயா என கேட்டார்" என்று தனது பணிக்கால சுவாரசியமான விஷயங்களை  ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் பகிர்ந்து கொண்டார். சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்துக் கொண்டால் காவலர்கள் நேர்மையாகவும், திறமையாகவும் செயல்பட முடியும் என்றும் பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com