"தமிழகத்தில் எச்1என்1 காய்ச்சல் நிலை என்ன?’ "-அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்

"தமிழகத்தில் எச்1என்1 காய்ச்சல் நிலை என்ன?’ "-அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்
"தமிழகத்தில் எச்1என்1 காய்ச்சல் நிலை என்ன?’ "-அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்
Published on

எச்1என்1 காய்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், காய்ச்சலால் தமிழகத்தில் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் நெல்லையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, பொது தீவிர அறுவை சிகிச்சை பிரிவு, டிஜிட்டல் ஃப்ளோரன்ஸ் இயந்திரம் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம், தாய்க்கேர் விழிப்புணர்வு உருவாக்கும் மையம் உள்ளிட்ட கட்டிடங்களும், மேலும் சுகாதாரத்துறை சார்பில் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கடம்போடு வாழ்வு துணை சுகாதார நிலையம் மற்றும் பருத்திப்பாடு துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட 2.74கோடி ரூபாய் மதிப்பில் முடிந்த பணிகளை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எச்1 என்1 பாசிடிவ் இன்றைய தினம் வரை 442 பேர் மட்டுமே தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் வீடுகளில் மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எச்1என்1 நோய் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாய முக கவசம் அணிய வேண்டும்.

நோய் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வீடுகளில் கட்டாயம் தனிமை படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் பொது சுகாதாரம் சிறப்பாக உள்ளது. மக்கள் காய்ச்சல் குறித்த எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை.பருவமழை தொடங்கும் போது பல்வேறு வகையான காய்ச்சல்கள் வருவது வழக்கம். மூன்று பேர்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அந்தந்த பகுதிகளில் முகாம்கள் அமைத்து தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3500 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஆன்லைன் முறையில் தான் மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு கவுன்சிலிங் மட்டுமே நேரடியாக நடத்தப்படும். மத்திய அரசு கவுன்சிலிங் முடிந்த மறுநாளே தமிழகத்தில் கவுன்சிலிங் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பம் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பிரசவ அறுவை சிகிச்சை நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் மருத்துவத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்கள் மூலம் குற்றச்சாட்டு எழும் பகுதிகளில் நேரடியாக நாளை முதல் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் சுகாதார நிலையங்களில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

மேலும், "நாங்குநேரியில் 10 கோடி ரூபாய் மதிப்பில் விபத்து சிகிச்சை மையம் அமைகிறது. நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் மற்றும் அம்பாசமுத்திரத்தில் தலா 45 கோடி ரூபாய் மதிப்பில் தலைமை மருத்துவமனை அமைகிறது. கடந்த 10 தினங்களுக்கு முன் நெல்லை வந்த தமிழக முதல்வர் 72.10 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த பணிகள் நிறைவு பெறும் நிலையில் 700 படுக்கை வசதிகள், 10 அதிநவீன அவசர சிகிச்சை அரங்கங்கள், 200 அதி தீவிர சிகிச்சை படுக்கைகளும் அமைகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு உள்நோயாளிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரும், வெளி நோயாளிகள் 4 லட்சம் பேரும் பயன்பெறுவார்கள்" என தெரிவித்தார்.

தொடர்ந்து, 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்து முதல் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டினார். முன்னதாக நெல்லை வி.எம் சத்திரம் பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் முகாமையும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மேயர் சரவணன் மற்றும் துணைமேயர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், ரூபி மனோகரன் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com