`வணிக நோக்கில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கினால்...' – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

`வணிக நோக்கில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கினால்...' – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
`வணிக நோக்கில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கினால்...' – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
Published on

“தனியார் ரிசார்ட்டுகளில் வணிக நோக்கில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கியது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது. கடந்த 2019 தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அருவிகள் இயற்கையாக உருவாகின்றன. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஐந்தருவி, குற்றால அருவி உள்ளிட்ட இயற்கை அருவிகள் உள்ளன. சீசன் காலங்களில் ஏராளமான கூட்டம் நிரம்பி வழியும் சூழலில், பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஏராளமான ரிசார்ட்டுகள் தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணையதளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர்.

இதற்காக இயற்கையான அருவிகளின் நீர்வழி பாதையை மாற்றுகின்றனர். இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதுபோல சட்ட விரோதமாக செயற்கை தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “செயற்கை நீர்வீழ்ச்சிகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து நீதிபதிகள், இயற்கை அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குவது முற்றிலும் சட்டவிரோதமானது. ஆகவே 2 நாட்களுக்குள்ளாக தென்காசி, நெல்லை, குமரி, கோவை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.

அக்குழு அந்தந்த மாவட்ட தனியார் ரிசார்ட்டுகளில், வணிக நோக்கில் செயற்கை தனியார் நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடுகிறோம்” எனக்கூறி, வழக்கை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com