காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் தேர்வு முடிவில் விடுப்பு என்று போட வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
10 வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாமல் இருந்தால் தேர்வு முடிவில் விடுப்பு என குறிப்பிட வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா காரணமாக 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டனர்.
எத்தனை மதிப்பெண் எடுத்து இருந்தாலும், குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி என ஏற்கெனவே தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில், காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதாத மாணவர்களுக்கு விடுப்பு போட வேண்டுமென தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக கல்வி வல்லுநர்கள் கருதுகின்றனர்.