தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து தவறான கருத்துக்களை தெரிவித்து வந்தால் அவர் தமிழ்நாட்டில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்படும் என முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற மேலவை உறுப்பினர் பா.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழா அழைப்பிதழை நேரில் சந்தித்து வழங்கினர். இந்த நிகழ்வின் போது திமுக பொருளாளர் டிஆர்.பாலு, டிகேஎஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் பேசும்போது "சம்பா அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தவறி பெய்த பருவ மழையின் காரணமாக மிகக் கடுமையான அளவில் அறுவடைக்கு தயாராக நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அமைச்சர்களை அனுப்பி உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை பெற்று அந்த அறிக்கையினை மத்திய ஒன்றிய அரசிற்கு ஈரப்பதம் 22 சதவீதம் வரை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்."
மத்திய அரசும், உடனடியாக துறை அதிகாரிகளை அனுப்பி மிகவும் காலதாமதமாக 20 சதவீதம் வரை ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்து கொள்வோம் என்று அறிவிப்பை உடனடியாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் செய்ய தவறிவிட்டது. இருந்தாலும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர்க்கு நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளோம். அதேபோல் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பா.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பிதழை தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்.ரவி அவர்களுக்கு வாய்க் கொழுப்பு அதிகம், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்.ரவி அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். தமிழ்நாடு ஆளுநர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை ஏற்படும். காரல் மார்க்ஸ் குறித்து தமிழ்நாடு ஆளுநர் பேசியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 28ஆம் தேதி போராட்டம் நடைபெறும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொருத்தவரையில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுகவின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் ஈபிஎஸ் அல்ல மத்தியில் ஆளக்கூடியவர்களே. அதேபோல் சரணாகதி அடைவதில் ரொம்ப கைதேர்ந்த மனிதர் ஈபிஎஸ் என்று தெரிவித்தார்.