நடிகர் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மாமன்னன். நேற்று வெளியாகி தமிழகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்கிற தகவல்கள் சமூக வலைதளங்களில் சுழன்றடிக்கிறது.
காசிபுரம் என்கிற தனித் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் மாமன்னனான வடிவேலு. தொடர்ந்து அவர், தன் சொந்தக் கட்சி மாவட்டச் செயலாளராலே பல்வேறு நெருக்கடிகளுக்கு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிறார். தொடர்ந்து. கட்சியின் உத்தரவாதத்தோடு அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.வாக வெற்றி பெறுகிறார். இறுதியாக, மிகப்பெரிய பொறுப்பில் வந்து அமர்கிறார். இதில், வடிவேலுவின் கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்கிற தகவல்கள் பரவி வருகின்றன.
``"மாமன்னன் திரைப்படம் இன்னும் நான் பார்க்கவில்லை. நண்பர்கள் தகவல் சொன்னாங்க. 1972-ல் இருந்து அதிமுகவில் இருக்கிறேன். அம்மாவின் தீவிர விசுவாசி நான். என்னுடைய உழைப்பைப் பார்த்து கட்சியில் அமைப்புச் செயலாளர், அமைச்சர்,சபாநாயகர் என பொறுப்புக் கொடுத்து அழகு பார்த்தார்கள். என்னுடைய சாயலில் இந்தப் படம் வந்திருந்தால் அது அம்மாவுக்குக் கிடைத்த வெற்றி" என்றவரிடம், உங்களுக்கு அமைச்சர், சபாநாயாகர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு பின்னால், கட்சி நிர்வாகிகளால் புறக்கணிப்பு, நெருக்கடி போன்ற விஷயங்கள் சொல்லப்படுகிறதே என்று கேட்க, `` அதெல்லாம் இல்லை’’ என்பதோடு முடித்துக்கொண்டார்.
அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அந்தக் கட்சியில் பயணித்து வருபவர் தனபால். 1977 முதல் கடந்த 2021 வரை ஏழு முறை அந்தக் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அவற்றில், 1977, 1980, 1984, 2001 ஆகிய வருடங்களில் நடந்த தேர்தல்களில் சங்ககிரி தொகுதியிலிருந்தும் 2011-ல் ராசிபுரம் தொகுதியிலிருந்தும், 2016 மற்றும் 21-ல் அவிநாசி தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பையும், உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர், துணை சபாநாயகர், சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.