’நான் சுயசரிதம் எழுதினால் சில உண்மைகள் வெளிவரும், பிரச்னை ஆகிடும்’ என்று தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் கூறியுள்ளார்.
இந்து ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ராம மோகன் ராவ், “தமிழகத்தில் பத்து லட்சம் குடும்பங்கள் கோயில்களை நம்பி உள்ளனர். ஆனால் கோயிலை நம்பியுள்ள சமுதாயங்கள் இன்னும் கீழ் மட்டத்திலேயே உள்ளன. அவர்கள் முன்னேற்றத்தில் அரசு அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. அவர்களுக்காக அரசிடம் முறையிட உள்ளேன்” என்றார்.
மேலும், தலைமை செயலராக இருந்த நீங்கள் பல தேர்தல்களை நடத்திய அனுபவம் உள்ளது. அதனால் உங்களிடம் இந்த கேள்வி வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வழியுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “வாக்குப்பதிவ இயந்திரங்களில் எந்த தவறும் செய்வதற்கு வாய்ப்பில்லை. அப்படி தவறு செய்ய முடியும் என்றால் அதை தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ளும்” என்றார்.
ஜெயலலிதாவின் மறைவு, சட்டமன்றத்தில் இராணுவம் நுழைந்தது, பொங்கல் பரிசு, போன்ற அரசியல் சம்பந்தப்பட்ட எந்த கேள்விகளை தவிர்த்த ராம மோகன் ராவிடம் உங்களது சுயசரிதத்தை எழுதிவீர்களா என்ற கேள்விக்கு, “நான் என் சுயசரிதம் எழுதுவேன். அதனால் பல பிரச்னைகள் எழும். பலருக்கு பிரச்னையை உண்டாக்கும். அதனால் சில உண்மைகள் வெளிவரும். நீங்கள் கேட்டதற்காக இதை நான் நகைச்சுவையாகத்தான் சொன்னேன்” எனக்கூறினார்.