தன்னை மாநிலங்களவை உறுப்பினராக்க திமுக முன்வந்தால் போட்டியிட தானும் தயார் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தேவசகாயம் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. எனவே அதிமுகவை சேர்ந்த 3 பேரும், திமுகவை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக முடியும்.
இதனிடையே ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்தை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டது. பேராயர் எஸ்ரா சற்குணம், தாமஸ் பிராங்கோ உள்ளிட்டோர் சார்பில் இந்தக் கடிதம் எழுதப்பட்டது. மக்கள் பணிக்கான அனுபவமும், உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தேவசகாயத்தை எம்.பி. ஆக்குவது, திமுகவின் பெருமைக்கு மகுடம் சேர்க்கும் எனவும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் தன்னை மாநிலங்களவை உறுப்பினராக்க திமுக முன்வந்தால் போட்டியிட தானும் தயார் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தேவசகாயம் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார். மாநிலங்களவை எம்.பி.யாக வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.