அண்ணாவை இடியட் என்றும், கலைஞர் பேனாவை உடைப்பேன் என்றும் சொல்லிக்கொண்டு இருப்பதை கண்டு, திமுகவினர் இன்னமும் உணர்ச்சி குறைந்து போய்விடாமல் இருங்கள், திமுக தோழர்கள் எழுந்தால் உங்களின் பேச்சுக்கள் இனி ஒருநாளும் நிற்காது என சீமான் குறித்து சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.
ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுள்கள் பிறந்த அஷ்டமி நவமி நாட்களை எப்படி கெட்ட நாட்கள் என்று சொல்கிறார்கள்? என சனிப்பெயர்ச்சி கருத்தரங்கில் கேள்வி எழுப்பினார்.
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி கருத்தரங்கத்தில், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ஜோதிடம் அறிவியலுக்கு எதிரானது என அறிஞர்கள் கூறியும் கூட மக்கள் ஜோதிடத்தை நம்ப காரணம் மக்களின் அச்சமும் அறியாமையும் தான். கோகுலாஷ்டமியில் கிருஷ்ணர் பிறந்தார், ராமர் ராம நவமியில் பிறந்தார் என்றால் கடவுள்கள் பிறந்த அஷ்டமி, நவமி நாட்களை எப்படி கெட்ட நாட்கள் என்று சொல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இப்போதும் கூட பகுத்தறிவு கருத்துகளுக்கு எதிர்ப்பிருக்கிறது எனவோ, கயிறை கட்டுகிறார்களோ எனவோ கவலைப்படகூடாது, நம்மை எல்லாம் கொளுத்தாமல் விட்டிருக்கிறார்களே என மகிழ்ச்சி அடைய வேண்டும். அறிவியல் உண்மைகளை சொல்பவர்களை கொளுத்திவிடுவார்களோ என்ற அளவிற்கு அச்சம் வருகிறது. இதே மாதிரி தான் தொடர்ந்து காலமும், தமிழகமும் இருக்குமோ என்ற அச்சமும் எழுகிறது. மேடைகளில் அறிவியல் கருத்துக்களை சொன்னால் இந்து மதத்திற்கு எதிராக பேசுவது என கூறி தாக்குதல் நடத்தப்படுகிறது. அறிவு சார்ந்த இந்த நாடு, எதனைநோக்கி செல்கிறது என்ற கவலை எழுந்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி இருப்பதாலும், திராவிட இயக்கங்கள் இருப்பதாலும் தான் உண்மையை பேசும் நம்மை இன்னும் எரிக்காமல் இருக்கின்றார்கள். திராவிட இயக்கம் இருக்கும் காரணத்தால் தொடர்ந்து அறிவு வாழும், அறிவியல் வாழும், ஜனநாயகம் வாழும், கருத்து சுதந்திரமும் வாழும் என்று கூறினார்.
கருத்து சுதந்திரம் குறித்து பேசும் போது, சீமானின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய அவர், பேனாவை உடைப்பது கருத்து சுதந்திரம் என்றால், பேனாவை உடைத்தால் கையை உடைப்பேன் என்பதும் கருத்து சுதந்திரம் தான். உடைப்பேன் என சொல்லிவிட்டு அதை கருத்து சுதந்திரம் என்றுவேறு சொல்லிக்கொள்கிறார். ஆட்சிக்கு வந்து உடைப்பேன் என பிறகு விளக்கமளிக்கிறார். அப்படியானால் அது நடக்க போவதில்லை, அதற்கு முதலில் டெபாசிட்டாவது வாங்கவேண்டும். ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காத உங்களுக்கு இவ்வளவு பேச்சு இருக்குமானால், ஆளும்கட்சியான எங்களுக்கு எவ்வளவு பேச்சு இருக்கும்.
வெளிப்படையாக சொல்கிறேன் யாரும் கோபித்துகொள்ள வேண்டாம், திமுகவினர் இன்னமும் உணர்ச்சி குறைந்து போய்விடாமல் இருங்கள், அண்ணாவை இடியட் என்றும், கலைஞரின் பேனாவை உடைப்பேன் என்றும் கூறுவதை கண்டு, திமுக தோழர்கள் எழுந்தால் உங்களின் பேச்சுக்கள் இனி ஒருநாளும் நிற்காது என சீமானுக்கு எச்சரிக்கை விடுத்து பேசினார்.
புவி மைய கொள்கையை தவறு என்றும், சூரிய மைய கொள்கை தான் சரியானது எனவும் அறிவியல் உண்மை வெளிவந்த நிலையில், தவறாக உள்ள புவி மையத்தை அடிப்படையாக கொண்ட ஜோதிடம் மட்டும் எப்படி உண்மையாகும். பிறப்பின் அடிப்படையில் முடிவு செய்யும் ஜோதிடம் தவறானது. நல்ல நேரம் என கூறி குழந்தைகளை அறுவைசிகிச்சை செய்து எடுத்துவிடுகிறார்கள், மூட நம்பிக்கை காரணமாக குழந்தைகளை முழு வளர்ச்சிக்கு முன்பாகவே எடுத்துவிடுவார்கள், குழந்தை பிறந்த நேரமா?, தலை வந்த நேரமா?, இல்லை தொப்புள் கொடி வெட்டப்பட்ட நேரமா எதன் அடிப்படையில் பிறப்பின் நேரத்தை கணக்கிடுவார்கள் என கேள்விகளை வைத்தார்.