கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக, தமிழக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சர் என்ற பொறுப்பை பெற்றார். இந்த நிலையில், துணை முதலமைச்சருக்கான செயலாளராக ஐஏஎஸ் பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் உயர்கல்வித்துறை செயலாளர் பொறுப்புக்கு, கால்நடைத்துறை செயலாளராக இருந்த கோபால் ஐஏஎஸ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
TAMGEDCO தலைவராக உள்ள ராஜேஷ் லகானி, வருவாய் நிர்வாக ஆணையராகவும், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகுவிற்கு கால்நடை துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கைத்தறித்துறை செயலாளராக அமுதவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தவகையில், பல ஐஏஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இதற்கு முன்பாக உயர்கல்வித்துறை செயலாளராக இருந்துள்ளார். இதற்கும் முன்பாக நெடுஞ்சாலைத் துறை செயலாளராகவும், கடந்த ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை செயலாளராகவும் இருந்துள்ளார்.
மேலும், முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்த காலக்கட்டத்தில் (1996 - 2001), முதலமைச்சரின் செயலாளர்களில் ஒருவராக இருந்துள்ளார். இதுமட்டுமல்லாது, வருவாய்த்துறை, தொழில்துறை, கிராமப்புற மேலாண்மை, நில வருவாய் மேலாண்மை, சமூக நீதி மற்றும் மனித வள மேம்பாடு, நிதி உள்ளிட்ட துறைகளில் துணை செயலாளராக இருந்துள்ளார்.
பின் கைத்தறி மற்றும் காதி துறையின் முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். மேலும் மின்சாரம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மேலாண் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம், உழவர் சந்தைகளை வகுத்ததில் இவருக்கு முக்கிய பங்குள்ளது.