தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடர்பாக அமைச்சர்கள் சி.வி சண்முகம் மற்றும் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 20-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தபோது ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கலாம் என பேசப்பட்டது. ஆனால் ஜெயலலிதா சுயநினைவோடு இருக்குபோது அவரே வெளிநாட்டில் சிகிச்சை பெற விரும்பவில்லை” எனக் கருத்தை முன் வைத்தார்.
இதையடுத்து விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாதது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பதிலில் சந்தேகம் இருப்பதால் அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜிவ் கொலையில் ஜெயின் கமிஷன் ஒருபக்கம் விசாரித்தாலும் சிபிஐ மறுபக்கம் விசாரித்ததுபோல் சிலபேரை கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்தால்தான் உண்மையெல்லாம் வெளிவரும். இவர்களிடம் சும்மா கூப்பிட்டு ஒரு வாக்குமூலம் வாங்குவதால் உண்மை வராது. கூட்டிட்டு போய் நன்றாக ட்ரீட்மெண்ட் கொடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடர்பாக அமைச்சர்கள் சி.வி சண்முகம் மற்றும் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கம் நிறைவேற்றிய தீர்மானம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் பணியில் உள்ள ஒரு அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குடிமைப் பணி அதிகாரிகளை மனச்சோர்வடைய வைப்பதுடன் அவர்களது கடமையை செய்வதற்கு இடையூறாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களை கட்டுக்குள் வைக்கவேண்டும் என முதலமைச்சரை ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சட்டத்துறை அமைச்சரே அதிகாரிக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது சட்ட நடைமுறையை பாதிக்க வாய்ப்பு உள்ளது எனவும் ஜெயலலிதாவுக்கான சிகிச்சையை முடிவு செய்தது மருத்துவர்கள்தானே தவிர சுகாதாரத்துறை செயலாளருக்கு பங்கு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.