ஈரோடு கூடுதல் ஆட்சியர் மனிஷ் ஐ.ஏ.எஸ் (2016 பேட்ச்), தான் சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறையின் துணை கமிஷனராக பணியாற்றியபோது, ககன் தீப் சிங் பேடிக்குக் கீழ் பணியாற்றியபோது (அப்போதைய சென்னை மாநகராட்சி ஆணையர், தற்போதைய சுகாதாரத்துறை செயலர்) அவரால் சாதிய ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜூன் 2-ம் தேதி இதுதொடர்பாக அவர் தமிழ்நாடு தலைமை செயலருக்கு எழுதிய கடிதத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று அவர் பகிர்ந்துள்ளார்.
“நான் மருத்துவர் மனிஷ் நர்னாவாரே. தற்போது ஈரோடு கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறேன். இந்தக் கடிதம், சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறையின் துணை கமிஷனராக நான் பணியாற்றிய 14.06.2021 - 13.06.2022 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களை பற்றியது.
நான் ககன் தீப் சிங் பேடி அவர்களுக்கு கீழ் பணியாற்றியபோது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
என் பணி காலத்தில், பேடி அவர்களால் மிக மோசமான பல தொல்லைகளுக்கு உள்ளானேன். நான் எஸ்.சி பிரிவை சேர்ந்த நபர் என்பதை பேடி அவர்கள் அறிந்துவைத்து, அதன்பேரிலேயே வேண்டுமென்றே இவற்றை செய்தார்.
கோமல் கௌதம் என்ற செய்தியாளர் பதிவிட்ட தவறான செய்தி குறித்து நான் ட்வீட் செய்திருந்தேன். அதை டெலிட் செய்யும்படி என்னை வற்புறுத்தினார். முதலில் மறுத்தாலும், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களால் நான் அதை டெலிட் செய்தேன். அதன்பிறகுதான் கீழ்வரும் தொடர்ச்சியான சம்பவங்களை நான் எதிர்கொண்டேன் (சுமார் 6 மாதங்களுக்கு)
* கோமல் கௌதம் என்ற அந்த செய்தியாளரின் ‘சுடுகாட்டில் தவறான பல வேலைகள் நடக்கின்றன’ என்ற தவறான குற்றச்சாட்டை முன்வைத்து, சுடுகாடொன்றில் ஆய்வு மேற்கொள்ள சொல்லி, இரவு 8.30 மணிக்கு (சுடுகாடு அந்நேரத்தில் மூடியிருக்குமென தெரிந்து) என்னை ஆய்வுக்கு அனுப்பினார் பேடி. அதற்கு முன்னர்தான் நாங்கள் இருவரும் தேசிய சஃபாய் கர்மாச்சாரி ஆணைய சேர்மனை சந்தித்துவிட்டுத் திரும்பியிருந்தோம்
* எஸ்.இ.வீரப்பன் என்பவரை பணி மாறுதல் செய்து, என்னுடைய திடக்கழிவு மேலாண்மை குழுவை மிகவும் பலவீனமாக்கினார் பேடி.
* சமூக நல அலுவலர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரிக்கு இடையே சண்டையை உருவாக்கி, எனது சுகாதாரத்துறை குழுவையும் பலவீனமாக்கினார் பேடி. இவை எனது ஒட்டுமொத்த சுகாதாரத்துறை பணியையும் தொய்வடைய செய்தது
* இதன்பின் எனக்கு கீழ் வரும் துறைகளையும் குறைத்துவிட்டார்
* ஒவ்வொரு ஆய்வு கூட்டத்தின்போதும் (40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கூடுவர்), தேவையில்லாத விஷயங்களுக்காக என்னைத் திட்டுவார் (மீட்டிங் ஹாலில் ஏன் கொசுக்கள் உள்ளன, என்ன செய்கிறார்கள் அதிகாரிகள் என்று கூறிவிட்டு சிரிப்பது போன்றவையும் நடந்துள்ளது)
* எனக்கும் அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் இடையே மோதலை உண்டாக்க முயற்சித்தார்
* இந்தூர் மாநகராட்சியில் நடந்த எங்க அலுவல் ரீதியான பணியின்போதுபோது, என் சாதியையும் நம்பிக்கையையும் குறிப்பிட்டு, ‘நீ ஏன் உஜ்ஜெய்ன் கோயிலுக்கு செல்கிறாய் (புத்த மதத்தை ஏற்றுக்கொண்டுவிட்டு)’ எனக்கேட்டார். இதை அவர் தொடர்ந்து செய்துள்ளார்
* சக ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன் அவர் எனது பேட்ச்மேட் ஒருவரை வேண்டுமென்றே கேவலப்படுத்த முயன்றார். அவர் ஒரு ஊழல் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறினார்.
* என் கோப்புகளில் கையெழுத்திடாமல் இருப்பார். வழக்கமான கோப்புகளில் ஒப்புதல் மற்றும் கையொப்பத்தைப் பெறுவதற்காககூட, என்னை தினமும் இரவுவரை நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளார். (சில நேரம் "தம்பி, இப்போ லேட் ஆகிடுச்சா, நாளைக்கு வா என்பார். மறுநாளும் இதே பதிலை சொல்வார்)
தொடர்ச்சியாக நடந்த இந்த சம்பவங்களும் அதில் ஏற்பட்ட அவமானங்களும் என்னை உடையச்செய்துவிட்டது (அதன் காரணமாக நான் பலமுறை அழுதேன்). மேலும் நான் மன உளைச்சலுக்கும் ஆளானேன். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இதை நான் பேடி அவர்களிடமே ஒரு நாள் தெரிவித்தேன். ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் ஒருபோதும் கவலைப்படவில்லை.
தொடர்ந்து அதையே செய்துவந்தார். தற்கொலை எண்ணம்கூட எனக்கு வந்தது. அந்த நேரத்தில், என் தந்தை உடனடியாக சென்னைக்கு வந்து எனக்கு நம்பிக்கை அளித்தார்.
நேர்மையான ஒருவரின் மதிப்பை குறைத்து, அவரை மன உளைச்சலுக்கு வழிவகுக்கும் பேடி அவர்களின் இந்த செயல்கள் யாவும், குறிப்பாக அந்நபர் எஸ்.சி சமூகத்தை சார்ந்தவர் என்ற தெரிந்து அதற்காக செய்கையில் அது எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வரும்.
இச்சம்பவத்தில் நான் சுகாதாரத்துறைத் துறை பொது செயலாளரை சந்தித்து எனக்கு பணியிட மாறுதல் கேட்டேன். அதன்படி அவரும் கொடுத்தார். அதற்கு என்றும் பொது சுகாதார அலுவலகத்துக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
எனது இந்த காலகட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் மதிப்பிற்குரிய அமுதா ஐஏஎஸ், அவர்களின் தொடர் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலால் எனது மனநிலை மேம்பட்டிருந்தது. அதற்கு வாழ்நாள் முழுக்க நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
எனது இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”
தற்போதைய சுகாதாரத்துறை செயலர் மீது கூடுதல் ஆட்சியர் ஒருவர் கடுமையான வன்கொடுமை குற்றச்சாட்டுகளை வைத்திருப்பது, அரசு அதிகாரிகள் மத்தியில் மட்டுமன்றி, சாமாணியர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ட்வீட் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் ட்வீட்டை டெலிட் செய்துள்ளார். இருப்பினும் அவர் தலைமை செயலருக்கு கடிதம் எழுதியிருப்பது உறுதியாகியுள்ளது. அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு, ‘Cultivation of mind should be the ultimate aim of Human existence’ என்ற அம்பேத்கரின் வார்த்தைகளை ட்வீட் செய்துள்ளார் மனீஷ் ஐஏஎஸ்
இந்தக் குற்றச்சாட்டுக்கு ககன் தீப் சிங் பேடி பதிலளித்துள்ளார். அதில் அவர், “மனீஷ் மிகவும் நல்ல அதிகாரி, சுறுசுறுப்பாக செயல்படக் கூடியவர்; அவர் அனுப்பிய கடிதத்தை படித்தேன், எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
இரண்டு மாதத்திற்கு முன்பு கூட என்னிடம் இயல்பாக பேசினார்; கோவிட் சமயத்தில் எனக்கு கீழே இருந்த அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தனித்தனியே வேலையை பிரித்துக் கொடுத்தேன். அனைவரும் இணைந்து மக்களுக்காக பணியாற்றினோம்.
எந்த ஒரு உள்நோக்கத்தோடும் நான் இதுவரை யாரையும் நடத்தியதில்லை. என்னுடைய பணி அனுபவத்தில் இதுபோன்ற புகார்கள் யாரும் என் மீது கொடுத்ததில்லை. எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
நான் இதுவரை பணியாற்றிய இடங்களில் சாதி ரீதியாக யாரையும் நடத்தியது கிடையாது. மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலகட்டங்களில் இரு தரப்பினர் இடையே நடைபெற்ற சாதி சண்டைகள் பலவற்றை நான் தீர்த்து வைத்துள்ளேன்.
ஏழை எளிய வலிய மக்களுடன் இருந்துள்ளேன்... எனக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளிடம் தெளிவாகவும் நேர்த்தியாகவும் பணிபுரிய கட்டளையிட்டுள்ளேன்.
ஆனால் ஒருபோதும் சாதி ரீதியாக பிரித்து வைத்தது கிடையாது... இது என்னுடன் பழகிய அனைவருக்கும் தெரியும்...” என்று கூறியுள்ளார்