ஐஏஎஸ் ஆகவேண்டும் என்று தொடர்ச்சியாக வாட்ஸ் அப்பில் ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சிவில் தேர்வு எழுதுவதற்கான ஆலோசனையை ஆட்சியர் உமா மகேஸ்வரி வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் மதியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கோமதி. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உயிரியல் படித்து வருகிறார். இந்நிலையில் கோமதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கல்லூரிப் படிப்பை திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து வந்த கோமதிக்கு மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்துவரும் உமா மகேஸ்வரியின் செயல்பாடுகளை பார்த்து, கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது.
இதையடுத்து கோமதி ஆட்சியர் உமாமகேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தினந்தோறும் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் நானும் உங்களைப் போல ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும். அதற்கான வழிமுறை என்ன என்பதையும் கேட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கோமதியை நேரில் அழைத்து ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்கு திருமணம் ஒரு தடையல்ல என்றும் தானும் திருமணத்திற்குப் பிறகுதான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆனேன் எனவும் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் பேச்சை கேட்ட கோமதி கண்கலங்கி நன்றி தெரிவித்தார். மேலும் கோமதிக்கு ஆட்சியர் ஐஏஎஸ் தேர்வுக்கான மாதிரி கேள்வித்தாள் அடங்கிய புத்தகத்தை வழங்கினார்.