தனது சொத்துக்களை விற்றாவது இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பேன் என புதிய ஊராட்சி மன்றத் தலைவர் சபதம் செய்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், போட்டியிட்ட இராஜாராமன் 206 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பதவிஏற்பு விழா நாயகனைப்பிரியாள் ஊராட்சியில் நடைபெற்றது. பதவியேற்ற இராஜாராமன் பேசும் போது....
"எனது சொத்துக்களை விற்றாவது இந்த ஊராட்சியில் திருஞானம் படையாச்சி நினைவாக அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை அமைத்து தருவேன். இதற்காக எத்தனை லட்சம் செலவானாலும் சரி, எனது சொத்துக்களை இழந்தாலும் சரி, இப்பகுதியில் உள்ள மக்களுக்காக நான் முழு மூச்சாக நின்று இந்த சுகாதார நிலையத்தை அமைப்பேன்" என்றார்.