முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
டிடிவி தினகரன் ஆதரவாளர்களில் முக்கியமானவரான செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நான்கு கோடியே 25 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இந்த சோதனை 3-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில், வீடுகள், நிறுவனங்கள் என சுமார் 20 இடங்களில் நேற்று முன்தினம் பிற்பகல் சோதனை தொடங்கியது. கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஜவுளி ஆலை, கோவை சாலையில் உள்ள உணவு விடுதி உள்ளிட்ட இடங்களில் 36க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது பற்றிய விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.