தேனி அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கொரோனாவுக் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் உற்றுநோக்க வைக்கும் விஷயமாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகள் ஆகியும் கொரோனாவின் பிடியில் இருந்து மக்கள் விடுபடாமல் தவிக்கின்றனர். முதல் அலை, இரண்டாம் அலை தாண்டி தற்போது மூன்றாம் அலையின் எச்சரிக்கையால் மக்களிடம் அச்சத்தை அதிகரித்துள்ளது. கொரோனா மீதான பயம் ஒரு புறம் இருக்க, சமீபத்தில் கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் கொரோனா தேவி சிலைவைத்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தியது சமூக வலைத்தளங்களிலும் வைரலானது .
இந்தநிலையில், தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராஜரத்தினம் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கொரோனாவுக்கு கோவில் கட்டும் பணியை தொடங்கி உள்ளார். இதற்காக அவர் அங்கு ஒரு பெயர் பலகையும் வைத்துள்ளார். கம்புகள் நடப்பட்டு அதில் வேப்பிலையும் கட்டப்பட்டுள்ளது. இது பலரையும் உற்று நோக்க வைக்கும் விஷயமாகி உள்ளது.
இதுகுறித்து ராஜரத்தினத்திடம் கேட்டபோது.... :நான் மின்சார வாரியத்தில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது விவசாயம் செய்து வருகிறேன். கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் பழங்காலத்தில் அம்மை நோய்தாக்கம் போக்க அதற்கு அம்மன் வழிபாடு இருந்தது. இதே போல்தான் கொரோனாவையும் பார்க்கிறேன். அதனால் கோவில் கட்ட முடிவு செய்தேன் விரைவில் மேடை வடிவில் கோவில் கட்ட உள்ளேன்' என்றார்.