''ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வதா” என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை பார்த்து கேள்வி எழுப்பி சட்டமன்றத்தில் தான் பேசியதையே மறைக்க முயற்சிப்பது வேதனையளிக்கிறது'' என்று ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
''ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர், அதுவும் அ.தி.மு.க. ஆட்சி முடிவு எடுப்பதற்கு முன்பே களத்திற்கு வந்தவர் ஸ்டாலின். மெரினா போராட்டமாக இருந்தாலும்- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்றாலும்- அன்று போராடிய இளைஞர்களோடு தோளோடு தோள் நின்றவர். அ.தி.மு.க. அரசு - ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் - அதுவும் அறவழியில் போராடிய இளைஞர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியதும் உண்மை; போலீஸ் தடியடி நடத்தியதும் உண்மை. மீனவர்களின் கடைகளை சென்னை நடுக்குப்பத்தில் அடித்து உடைத்ததும் உண்மை. ஏன் போலீசாரை விட்டு டயர்களை கொளுத்தி விட்டு- ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் மீது பழி போட முயற்சி செய்ததும் உண்மை.
இதில் எது பொய் என ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகு போராட்டத்திற்குப் பணிந்து- ஒன்றிய பா.ஜ.க. அரசும்- ஓ.பி.எஸ். முதலமைச்சராக இருந்த அ.தி.மு.க. அரசும் – இளைஞர்களின் உணர்வுகளை இனியும் எதிர்க்க முடியாது என்ற தெரிந்த பிறகுதான் ஜல்லிக்கட்டுக்குச் சட்டம் இயற்ற ஒப்புக் கொண்டது.ஆனால் துவக்கம் முதலே போராடிய இளைஞர்கள் பக்கம் நின்று- சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு மசோதாவை ஆதரித்து ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுத்தவர்தான் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்.
சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மீது எவ்வளவு அவதூறுகளை வீச முடியுமோ, எத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியுமோ அத்தனையையும் செய்து விட்டு இன்று ஒன்றும் தெரியாதது போல் அறிக்கை விடுவதும்- உண்மையைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய மு.க.ஸ்டாலின் அவர்களைக் கண்டனம் செய்வதுதான் அரசியல் நாகரிகமா?
எங்கள் தலைவர் மிகத் தெளிவாக- அடுத்த முறை சட்டமன்றத்திற்கு வரும் போது – ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்திப் பேசியதை படித்துப் பாருங்கள் என்றுதான் ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு சொல்லியிருந்தார். அதைக்கூட புரிந்து கொள்ளாமல்- மதுரையில் தன் வேடத்தை கலைத்து விட்டாரே- இளைஞர்களின் சாதனையை தன் சாதனை போல் இத்தனை காலமும் பேசி வந்ததை அம்பலப்படுத்தி விட்டாரே என்ற கோபத்தில் - எரிச்சலில் முதலமைச்சர் அவர்கள் மீது பாய்ந்து கண்டன அறிக்கை வெளியிடுவதில் அர்த்தமில்லை'' என்று தெரிவித்துள்ளார்.