தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோடு சாலையில், 'ஏ.393- கோவில்பட்டி கூட்டுறவு நகர வங்கி லிட், இயங்கி வருகிறது. இந்த வங்கியில், முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து உண்மை தன்மை கண்டறியும் பொருட்டு விசாரணைக்கு கோவில்பட்டி சரக துணைப் பதிவாளர் செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பலபேரின் வீட்டுக்கு சென்ற விசாரணை அழைப்பாணை கடிதத்தைப் பார்த்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடன் வாங்காமல் எப்படி கடன் வாங்கியதாக அழைப்பாணை வருகிறது என்று அவர்களது வீட்டில் பிரச்னையும், ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி கட்டி முடித்தவர்களுக்கும் அழைப்பாணை சென்றிருக்கிறது.
இதனால், அதிர்ச்சியடைந்தவர்கள் விசாரணைக்காக கோவில்பட்டி நகர கூட்டுறவு வங்கிக்கு வந்தனர். அப்போது, கோவில்பட்டி வ.உ.சி நகர் 3வது தெருவைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவரின் மனைவி விஜயலட்சுமி வீட்டுப் பத்திரத்துடன் வந்தார். நேராக விசாணை அதிகாரியிடம் சென்று, 'நான் கடன் வாங்கி கட்டி முடித்துவிட்டேன். வங்கியிலிருந்து பத்திரத்தையும் வாங்கிவிட்டேன். ஆனால், 13 தவணை பாக்கி இருப்பதாக கடிதம் அனுப்பி இருக்கிறீர்களே'. என்று கேட்டுள்ளார்.
அதேபோல் பலரும் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து எழுத்துப்பூர்வாக கொடுங்கள் தருகிறோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடனே வாங்காதவர்களுக்கு கடன் வாங்கியதாக அழைப்பாணை கடிதம் கொடுத்து விசாரணை நடத்திய சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை முடிவில் தான் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.