தமிழக அரசியல் குழப்பம் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த முகுல் ரோத்தகி, பெரும்பான்மையை நிரூபிக்க இருதரப்புக்கும் சட்டப்பேரவையில் ஒரே நேரத்தில் வாய்ப்பு அளித்து அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்க ஆளுநர் வாய்ப்பளிக்கலாம் அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு பெற்றவரை தமிழக முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்து, சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுக்கலாம் என்று தெரிவித்தார். அதேபோல, கட்சிக்குள் உள்ள பெரும்பான்மையையும் சட்டமன்ற வாக்கெடுப்பு மூலமே நிர்ணயிக்க முடியும் என்று கருத்து தெரிவித்த ரோத்தகி, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் 2 அல்லது 3 நாட்களில் முடிவுக்கு வரும் என்று தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அக்கட்சியின் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தினை ஆளுநரை நேரில் சந்தித்து கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சியமைக்க நேற்று உரிமை கோரியிருந்தார்.