இன்று புதிய முதல்வராக பதவியேற்ற முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கூட்டத்தில் புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் தனக்கு இல்லை என்றும் முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் திமுகவின் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர். மக்களின் உயிர்காக்கும் உன்னத பணியில் அரசோடு நீங்கள் தோளோடு தோள் கொடுத்து நிற்பீர்கள் என்று நம்புகிறேன்.
தற்போது தினசரி பாதிப்பு 25,000 ஆக உள்ள நிலையில் அந்த பாதிப்பு உயர உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால் அதற்கேற்ப மருந்துகள்,ஆக்ஸிஜன் இருப்பு, படுக்கைகள் உள்ளிட்டவற்றின் தேவை அதிகரிக்கும். ஆகையால் அதற்கான நடவடிக்கைகளை நாம் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
இறப்புகளை குறைத்திட கடந்த ஓராண்டாக மருத்துவத்துறை கொடுத்த அர்ப்பணிப்புமிக்க உழைப்பு தொடர்ந்திட வேண்டும். கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுங்கள். மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசர, அவசியத்தேவை எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் ஏற்படும் கொரோனா பாதிப்பை குறைக்க அந்தப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த கூட்டமெல்லாம் நமக்கு நாமே ஆறுதல் அடைகிற கூட்டமல்ல. உண்மையை நேருக்கு நேராக சந்தித்தால் மட்டுமே நமது பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். ஆகையால் அதிகாரிகள் ஒளிவு மறைவு இல்லாமல் செயலாற்றுங்கள். புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம்” என்று பேசினார்.
முன்னதாக, தமிழகத்தில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா பாதிப்பை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.