கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் போடலாம் யாரெல்லாம் போடக்கூடாது என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையில் கையேடு வெளியிட உள்ளதாகவும், மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை எனில் நானே கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயாராக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் பேட்டியளித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய பாஸ்கர், “நாளை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார், தமிழகத்தில் 166 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக ஏற்கெனவே பலகட்ட ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்குதடையின்றி நாளை கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெறும், அதற்கான விரிவான ஏற்பாடுகளை மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள தலைசிறந்த பிரபலமான 10 மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள உள்ளனர். இதற்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்டுள்ள சிரஞ்சியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும், அது போதுமான அளவில் இருப்பில் உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாம், அதே வேளையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 14 நாட்கள் முடியாதவர்கள் இந்த ஊசியை எடுத்துக் கொள்ளக் கூடாது. யாரெல்லாம் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் யாரெல்லாம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் வகையில் கேள்வி பதில் அடங்கிய கையேடு வெளியிடப்பட உள்ளது.
முதற்கட்டமாக மருத்துவ துறையை சார்ந்த முன் களப்பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது, படிப்படியாக அடுத்த கட்டமாக மற்ற துறையைச் சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும், மக்களுக்கு ஏற்படும் அச்சத்தைப் போக்க முதலில் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் இந்த ஊசியை செலுத்த உள்ளோம்.
அப்படி மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை எனில் மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தால் நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” என்று கூறினார்.