"எனக்கு வயது ஐம்பது" - காலங்கள் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் சென்னை அண்ணா மேம்பாலம்!
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கடந்த 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கியது. இதையடுத்து 21 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஜூலை 1ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில், இன்று வரை கம்பீரமாக காட்சியளிக்கும் அண்ணா மேம்பாலம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவின் மிக நீளமான மேம்பாலமாக விளங்கிய அண்ணா மேம்பாலத்தின் அருகே கடந்த 1976 ஆம் ஆண்டு வரை ஜெமினி ஸ்டூடியோ செயல்பட்டு வந்தது, அதனால் ஜெமினி மேம்பாலம் என்றும் இந்த பாலம் அழைக்கப்படுகிறது.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணா மேம்பாலத்தை 8.85 கோடி செலவில், சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று இந்த புதுப்பிக்கப்பட்ட மேம்பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.