கொரோனா நிவாரணப் பணிகளுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பிரபல தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து நிதி அளித்து வருகின்றன.
ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் 5 கோடி ரூபாய் காசோலையும், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியன் வங்கி சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலை முதலமைச்சரிடம் நேரில் வழங்கப்பட்டது. பிரபல தொழிலதிபர் வி.ஜி.பி சந்தோசம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கினார்.
பில்ரோத் மருத்துவமனைகளின் சார்பில் அதன் முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் கல்பனா ராஜேஷ், கொரோனா நிவாரணமாக 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார்.
மேலும், ஓசூர் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தொழிலாளர்கள் தரப்பில் ரூபாய் 25 லட்சத்துக்கான காசோலையை தொழிற்சங்க தலைவர் குப்புசாமி முதலமைச்சரிடம் வழங்கினார்.
இது தவிர மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வணிகர் சங்கங்கள், வணிக நிறுவனங்கள் சார்பிலும் நிதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அதன் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.