நெடுவாசலில் நடைபெற உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுகோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. நிலத்தடி நீருக்கும் பாதிப்பு இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை வெளியிட்டுள்ள அறிகையில், மிக குறைவான நிலப்பரப்பே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். இத்திட்டத்தால் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு தோண்டப்பட்ட எண்ணெய் கிணறுகளால் விவசாயம் பாதிக்கவில்லை என கூறியுள்ள மத்திய அரசு, இத் திட்டத்தால் ரூ.300 கோடி வருவாய் ஈட்டப்படும் எனவும் இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.40 கோடி ராயல்டி கிடைக்கும் எனவும் கூறியுள்ளது.