மன்னார்குடி அருகே உள்ள சித்தேரி கிராமத்தில், காதுகேளாத வாய்பேச முடியாத மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், உடைந்த கால்களோடு வாழ்க்கை நடத்தும் குடும்பத் தலைவன் அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் 3வயதில் லோகேஷ் என்ற மகனும், 2 வயதில் சாதனா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், ராதாகிருஷ்ணன் கடந்த 2015ஆம் ஆண்டு வேலைக்காக மலேசியாவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு நிகழ்த்த விபத்தில் அவரது கால் எலும்புகள் 3 துண்டுகளாக உடைந்து பாதிக்கப்பட்டார். பின்னர் ஊர் திரும்பிய அவர், சித்தேரி கிராமத்தில் பெட்டிக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இதையடுத்து ராதாகிருஷ்ணனுக்கு கால் உடைந்திருப்பதால் பிற கடினமான வேலைக்குச் செல்ல அவரால் முடியவில்லை. இந்த நிலையில் கிராம பகுதியில் இவர் நடத்திவரும் பெட்டிக்கடை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.
எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை அரசு தனக்கும் வழங்க வேண்டும் என்றும், அரசு வேலை கிடைத்தால் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் வாய்பேச முடியாத, காது கேளாத தனது மனைவியை கவனித்து கொள்ளவும், தனது குடும்ப முன்னேற்றத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றும் ராதாகிருஷ்ணன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.