சேலம் அருகே இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அல்லிக்குட்டை அருகே கங்காபுதூர் பகுதியில் கடந்த வாரம் முட்புதரில் இளம்பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சடலமாக கிடந்த பெண் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்த மோகனேஸ்வரி என்பது தெரியவந்தது. இவரை கோவையை சேர்ந்த கோபி என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். கோபி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
(கோபி-மோகனேஸ்வரி தம்பதி)
இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோகனேஸ்வரி கணவரை பிரிந்து வந்து சேலத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் இருந்தார். பின்னர் மீண்டும் குடும்பம் நடத்த வரும்படி கோபி பலமுறை அழைத்தும் கணவருடன் செல்ல விரும்பாமல் சேலம் கடைவீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் மோகனேஸ்வரி வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு மோகனேஸ்வரி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் குடும்பம் நடத்த வர மறுத்ததால் மோகனேஸ்வரியின் கணவரே கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
(கொலைக்கு உதவி செய்த கோபியின் நண்பர்கள்)
இந்தச் சூழலில் கோபி கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து அவரை காவலில் எடுத்து வீராணம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் விசாரணையில் மனைவியை கொலை செய்ய கோபிக்கு அவரது நண்பர்கள் நான்கு பேர் உதவி செய்திருப்பது தெரியவந்தது. அதன்படி கோபியின் நண்பர்களான சேலம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்த விஜி, காளியப்பன், வீரங்கன், மோகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோபியின் நண்பர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திட்டமிட்டு மோகனேஸ்வரியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கைதான கோபியின் நண்பர்கள் நான்கு பேரையும் காவல்துறையினர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.