மனைவி இறந்தாலும் தன்னுடனேயே இருக்க வேண்டும் என எண்ணி மனைவிக்கு கோயில் கட்டி கணவர் ஒருவர் வழிபாடு நடத்தி வருகிறார்.
சென்னை தாம்பரம் அடுத்த எருமையூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் ரவி. இவர் சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா, இவர்களுக்கு திருமணம் ஆகி 32 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு விஜய், சதீஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ரேணுகா உயிரிழந்துள்ளார்.
மனைவியை விட்டு ஒரு நாளும் பிரியாத கணவர் தன் மனைவியின் இறப்பை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாத நிலைக்கு சென்றார். இதுகுறித்து ரவி, “அவ்வப்போது சண்டையிட்டாலும் ஒரு மணி நேரத்தில் சமாதானம் ஆகி சகஜ நிலைக்கு வந்து விடுவோம். ஆனால் இன்று அவர் இல்லாத நிலையில் நானும் இறந்திருப்பேன். இரண்டு மகன்களின் நலன் கருதி நான் வாழ்ந்து வருகிறேன்” எனக் கண்ணீர் மல்க கூறுகிறார்.
மனைவி உயிருடன் இருக்கும் போது அவர் ஆசைப்பட்டு கேட்ட சொந்த வீடு கனவு முடியாமல் போனாலும், மனைவிக்காக 9க்கு 9 அடி நீளம் அகலத்தில் 16 அடி உயரத்தில் ரவி கோயில் கட்டியுள்ளார். அதில் பளிங்கு கல்லில் மனைவியின் உருவத்தை செய்து ரவி மற்றும் அவரது பிள்ளைகள் வழிபட்டு வருகின்றனர். அந்தக் கோயிலுக்கு ரேணுகா அம்மான் திருக்கோயில் என பெயரிட்டுள்ளனர்.
இதுகுறித்து ரேணுகாவின் மகன் விஜய், “ எனது தாய் வீடு வாங்க வேண்டும் ஆசைப்பட்டார். ஆனால் அவர் இருக்கும் போது வீடு வாங்கு முடியாமல் போனது. சொந்த வீட்டில் தெய்வமாக வாழ முடியாவிட்டாலும், அவர் தெய்வமாக வாழ கோயில் கட்டியுள்ளோம்” என்றார். ரவி தன் கை கடிகாரத்தில், மோதிரத்தில், பாக்கெட்டில் என பல வடிவங்களில் மனைவியின் படத்தை வைத்துள்ளார்.