செய்தியாளர்: நிக்சன்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் - சுமித்ரா. தம்பதியர். இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், மகன் முருகானந்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தனது பெற்றோர் வசித்து வந்த வீட்டை காலி செய்யும்படி முருகானந்தம் வற்புறுத்தியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கணவன், மனைவி இருவரும் தற்கொலைக்கு முயன்று மயங்கி கிடந்துள்ளனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்த நிலையில், சுமித்ராவை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ரமேஷின் தந்தை நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுமித்ரா உயிரிழப்பதற்ககு முன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நானும் என் வீட்டுக்காரும் சாகப்போறோம். எனது இறப்புக்கு எனது மகனும் மருமகளும் மட்டுமே காரணம். வீடு வேண்டும் என்று கூறி எங்களை டார்ச்சர் செய்து மகனும் மருமகளும் கொடுமைபடுத்திவிட்டனர். நாங்க கோர்ட்டு கேஸ் என போனதில்லை; போலீஸ் ஸ்டேஷன் போனதில்லை. ஆனால், என்னை போக வைத்து விட்டனர்.
நான் செத்தால் எனது அக்கா மகன் மணிதான் கொல்லி போட வேண்டும். நான் பெத்த புள்ளை எனக்கு கொல்லி போடக் கூடாது. நான் செத்தால் என்னை அரசாங்கம்தான் அடக்கம் பண்ண வேண்டும். நாங்க காசு பணம் எதுவும் சேர்த்து வைக்கல. நான் இறந்த பிறகு என்னுடைய வீடு, வண்டி, போன் அனைத்தும் எனது மகளுக்கு சேர வேண்டும். எனது மகளுக்கும் மருமகனுக்கும் பாதுகாப்பு வேண்டும் என பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.