காவல் ஆய்வாளரை மிரட்டிய விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவத்திற்கு, திருவள்ளூர் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவர், வி.ஐ.பி வரிசையில் நுழைவுச் சீட்டுகளை பரிசோதிக்காமல் பக்தர்களை உள்ளே அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையறிந்த காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வாளரைத் திட்டும் வீடியோ வெளியானது.
கடந்த 9ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையர் உறுப்பினர் ஜெயச்சந்திரன், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்நிலையில் மிரட்டல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆட்சியருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.