போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வசந்தி, தனது கணவர் சுந்தரமூர்த்தியை காவல்துறையினர் 2009 ஜூலை 28ஆம் தேதி கைது செய்து அழைத்து சென்ற , போலி என்கவுண்டரில் சூட்டுக் கொன்றுவிட்டதாக புகார் அளித்தார். காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சித்தபோது, துப்பாக்கியால் சுட்டதில் அவர் இறந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். மேலும் தப்பி ஓடும்போது குண்டு முதுகில்தான் பாய்ந்திருக்க வேண்டிய நிலையில், தனது கணவர் உடலில் வலது நெஞ்சு, தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதால், இது போலி என்கவுண்டர் என்றும் குற்றம் சாட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி துரை.ஜெயாசந்திரன் விசாரித்தபோது, மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்து காவல்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில் இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாராணை நடந்த நிலையில், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு பதிலாக வருவாய் வட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும்,சிபிசிஐடி விசாரணை கைவிடபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தற்காப்புக்காகவே துப்பாக்கி சூடு நடந்ததாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து ஆணையம் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இரண்டு அடி தூரத்திலிருந்து தான் சுந்தரமூர்த்தி சுடப்பட்டார் என்பது தெளிவாவதாகவும், மனித உரிமை ஆணைய விதிகளை பின்பற்றாமல் நடத்தபட்ட போலி என்கவுண்டர் என நிரூபணமாவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். அதனடிப்படையில் சிவகாசி காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்,காவலர்கள் காமராஜ், சிவா, கருணாகரன் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைப்பதாகவும், வழக்கை முறையாக விசாரிக்காத சிபிசிஐடி ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அவர் பரிந்துரைத்துள்ளார். மேலும் என்கவுண்டரில் பலியான சுந்தரமூர்த்தி குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 லட்சட்சத்தை 4 வாரத்தில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து காவல்துறை செயல்பாட்டால் நிகழும் மரணங்கள் தொடர்பாக உடனடியாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.