'ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்' என்பதன் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்குச் சென்ற உதவி ஆணையர் இளங்கோவன், ரவுடிகளின் குடுத்தினரிடம் பேசும் காணொளி அண்மையில் இணையத்தில் வெளியானது. அதில், ரவுடியின் குடும்பத்தாரிடம் இளங்கோவன் எச்சரிப்பதுபோல இருந்தது. அந்த காட்சிகள் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி மணிக்குமார், உறுப்பினர் கண்ணதாசன் அமர்வு தானாக முன்வந்து விசாரித்தது.
அப்போது ஆஜரான உதவி ஆணையர் இளங்கோவன், சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் ரவுடிகளை எச்சரித்ததாகக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி மணிக்குமார், ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என ஆணையர் கூறியதன் அர்த்தம் என்ன எனக் கேள்வி எழுப்பினார். தெரியாது என உதவி ஆணையர் பதில் அளித்தைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் வரும் 14ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.