கொல்லம் டூ சென்னை ரயில் பெட்டியில் இருந்த பெரிய விரிசல்... ஊழியர்கள் சாதுர்யத்தால் சேதம் தவிர்ப்பு!
கேரள மாநிலம், கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு செல்லும் கொல்லம் - சென்னை விரைவு ரயில் நேற்று செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது வழக்கம்போல் செங்கோட்டை ரயில்வே ஊழியர்கள் ரயிலை சோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது, ரயிலில் உள்ள எஸ்-3 பெட்டியில் மிகப்பெரிய அளவிலான கிராக் ஒன்று இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில், விரைந்து வந்த ரயில்வே உயர் அதிகாரிகள் அந்த பெட்டியை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து எஸ் - 3 பெட்டியில் இருந்த பயணிகள் எஸ் - 2 பெட்டியில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், சுமார் ஒருமணி நேர தாமதத்திற்குப் பிறகு செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் - சென்னை விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயில் பெட்டியின் அடியில் மிகப்பெரிய கிராக் இருப்பதை சோதனையின் போது ஊழியர்கள் கண்டுபிடித்தால் மிகப் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.