சென்னையில் காவல்துறையினரை வெட்டிய ரவுடி ஆனந்தன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை தற்போது விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் கடந்த திங்கள்கிழமை கூட்டமாக இருந்த ரவுடிகள் குறித்து கட்டுப்பாட்டறைக்குக் கிடைத்த தகவல் காரணமாக அங்கு சென்ற காவலர் ராஜவேலு, ரவுடிகளால் கடுமையாக தாக்கப்பட்டார். பின்னர் ரவுடிகள் ஆனந்தன், அரவிந்தன் மற்றும் சிலர் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராஜவேலுவிடம் இருந்து வாக்கி டாக்கியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். முகம் மற்றும் தலையில் பல வெட்டுக்காயங்களுடன் விழுந்த ராஜவேலு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கொலைவெறித்தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 6 பேரை கைது செய்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான ஆனந்தன் உள்ளிட்ட நான்கு பேர், சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செயதனர். காவலர் ராஜவேலுவிடம் இருந்து பறித்த வாக்கிடாக்கியை பறிமுதல் செய்ய ஆனந்தனை மட்டும் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். வாக்கிடாக்கி பதுக்கிவைக்கப்பட்ட இடத்தைக்காட்டுவதாகக்கூறி, காவல்துறையினரை பல இடங்களுக்கு அலைக்கழித்துள்ளார் ஆனந்தன். இறுதியாக பாலிடெக்னிக் பகுதிக்குச் அழைத்துச் சென்றபோது, வாக்கி டாக்கியோடு மறைத்துவைத்திருந்த ஆயுதத்தை எடுத்து அங்கிருந்த காவலர்களை ஆனந்தன் அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆனந்தன், காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பமுயன்றான் இதனைதொடர்ந்து காவல்துறை உதவி ஆணையர் சுதர்சன் 9 எம்எம் பிஸ்டலால் சுட்டார். துப்பாக்கிச்சூட்டில் ஆனந்தன் உயிரிழந்தார்.
ஆனந்தன் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். அவர் மீது ஏற்கெனவே 5 கொலை முயற்சி வழக்குகள் உள்பட13 வழக்குகள் இருப்பதாகவும், 6 முறை சிறைக்குச் சென்று வந்தவர் என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தகவல்கள் : செய்தியாளர் ஆனந்தன் மற்றும் சுப்பிரமணியன்