நாளை உலகப் புலிகள் தினம்: வண்டலூரில் எத்தனை புலிகள் இருக்கிறது தெரியுமா ?
சென்னையை அடுத்து வண்டலூரில் இருக்கும் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் மொத்தம் 31 புலிகள் பராமரிக்கப்பட்டு வருவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் நாளை உலகப் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் " அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வனஉயிரினம் மற்றும் அதன் பாதுகாப்பை பற்றியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. ஜூலை 29, 2020 சர்வதேச புலிகள் தினத்தன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஓவிய போட்டி மற்றும் வினாடிவினா ஆகிய போட்டிகளை (மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்காக) ஏற்பாடு செய்துள்ளது.
அந்நிகழ்ச்சியில் பங்கேற்க www.aazp.in/wtd எனும் வலைதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். அனைத்து வயதினரும் இப்போட்டிகளில் இணைய வழியில் பங்கேற்கலாம். பங்கேற்போர் அனைவருக்கும் இ -சான்றிதழ் வழங்கப்படும். சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் Youtube சேனலில் மாலை 3.30 மணி முதல் 5.00 மணி வரை வனஉயரின வல்லுநர்களின் புலிகளுடனான நேரடி அனுபவங்கள் மற்றும் புலிகள் பற்றிய அரிய தகவல்களைபற்றி நேரலையாக விளக்கவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியினை https://www.youtube.com/channel/UC8IufECXfkVw1OaeUXXm5PQ எனும் வலைதளத்தில் காண முடியும்.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவானது பல்வேறு வனஉயிரினங்களின் பாதுகாப்பு இனபெருக்கத்திற்கு முன்னோடியாக திகழ்கிறது. இவற்றில் வங்கப் புலியானது குறிப்பிடத்தக்கவிலங்காகும். தற்பொழுது பூங்காவில் 31 புலிகள் இருக்கின்றன. அவற்றில் வெள்ளைப்புலிகள் 13 மற்றும் வங்கபுலிகள் 18 உள்ளன. மேலும் காட்டில் தனித்து விடப்பட்ட மற்றும் பூங்காவில் தாயினால் கைவிடப்பட்ட பல புலிக்குட்டிகளை கைவளர்ப்பின் மூலமாக இப்பூங்காவில் வளர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.