ஜல்லிக்கட்டுக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக சட்ட ரீதியாக எடுத்த நடவடிக்கையால் தான் அவசரச் சட்டத்தை மூன்றே நாட்களில் இயற்ற முயன்றதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியின்போது நீதிமன்ற உத்தரவைப் பெற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். மூன்று நாட்களில் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியதாகக் கூறும் அரசு, கடந்த மூன்று ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தது என வினவினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பன்னீர்செல்வம், முந்தையை ஆட்சியில் திமுக கொண்டுவந்த அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார். அதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்தன் விளைவாக மூன்றே நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது என முதல்வர் விளக்கமளித்தார்.