மேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்?: நீதிமன்றம்

மேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்?: நீதிமன்றம்
மேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்?: நீதிமன்றம்
Published on

மேலவளவு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொண்டும், இது சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என பரிசீலித்து தான் 13 பேர் விடுதலை முடிவு எடுக்கப்பட்டதா? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 1996-ஆம் ஆண்டு பட்டியலின  வகுப்பைச் சேர்ந்த முருகேசன் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக  முருகேசன் உட்பட ஏழு பேர் 1997-ல் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.   அண்ணா பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக இவ்வழக்கில் முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் ரத்தினம் அதனை எதிர்த்து வழக்கு தொடர, விடுதலை செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை தேவை. ஆனால் இன்னமும் அந்த அரசாணை கிடைக்கப் பெறவில்லை. எனவே 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் அரசாணையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்" என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு இன்று  நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், அரசுத் தரப்பில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பான அரசாணை உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.  மனுதாரர் தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்கள் வழங்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், “மேலவளவு ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோர் கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்? சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுசெய்துதான் முடிவெடுக்கப்பட்டதா?

இந்த 13 பேர் விடுதலை தொடர்பாக வழக்கறிஞர் ரத்தினத்தின் மனு எந்த அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது?  என்பது குறித்தும் நீதிமன்றம் அறிய விரும்புகிறது. ஆகவே இவை தொடர்பாக தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறினர்.

மேலும் அரசு நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கு போது அதற்கான பட்டியலை தயார் செய்து முன்னுரிமை அடிப்படையில் தான் விடுவிக்க வேண்டும். அந்த வகையில் தான் இந்த 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனரா? எந்த அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டது? என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. ஆகவே,  அவ்வாறு தயார் செய்யப்பட்ட முன்கூட்டியே விடுதலை செய்யப்படுபவர்களுக்கான பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். 

அத்துடன் எதிர் தரப்பினரின் கருத்தையும் கேட்க வேண்டுமென்பதால், இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரையும் நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்ப்பதாக உத்தரவிட்டனர். மனுதாரர் தரப்பில், 13 பேர் விடுதலை செய்யப்பட்ட அரசாணையை ரத்து செய்ய மனுத்தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் வழக்கை நவம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com