குறைந்த விலை என்ற வலையை வீசி, ஏழைத் தொழிலாளர்களை மதுமயக்கத்தில் வைத்திருந்த கள்ளச்சாராயம், விஷ சாராயமாகிப் போன பின்னணியைப் பார்க்கலாம்...
கள்ளக்குறிச்சி என்றாலே கள்ளச்சாராயம் என்ற முத்திரை, இப்போது மட்டுமில்லை, முன்பே இருந்திருக்கிறது... கல்வராயன் மலைதான் கள்ளச் சாராய மாஃபியாக்களின் ப்ரைம் ஸ்பாட். மலை முழுவதுமே வெவ்வேறு இடங்களில் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி வருகிறது இந்த மாஃபியா கும்பல்.
இதைத் தடுக்க, தொடர்ந்து கள்ளச்சாராய வேட்டையை நடத்தி வருகிறது காவல் துறை. ஆனாலும் கல்வராயன் மலையில் கண்கட்டி வித்தை காட்டி வருகிறது கள்ளச்சாராய மாஃபியா. அடிக்கடி கல்வராயன் மலையை சுத்து போடும் காவல்துறை, சாராய ஊறல்களைக் கண்டுபிடித்து, அழிக்கிறது. மலை மீது ட்ரோன்களைப் பறக்கவிட்டு கண்காணிப்பதும் உண்டு. இதையெல்லாம் மீறித்தான், கருணாபுரத்தை சோகபுரமாக்கியிருக்கிறார்கள் கள்ளச்சாராய மாஃபியா கும்பல்.
இப்போது கள்ளச்சாராயம் என்று சொல்ல முடியாது. விஷ சாராயம் என்று, தமிழ்நாடு அரசே கூறுகிறது. கருணாபுரம் சோக சம்பவத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐம்பதையும் கடந்து விட்டது... வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது. காவல்துறையின் குற்றப்பட்டியலில் 'ஏ ஒன்' என்ற இடத்தில் இருப்பவர் கோவிந்தராஜ்.
கன்னுக்குட்டி என்ற செல்லம் கொஞ்சும் இந்தப் பேருக்கு சொந்தக்காரர் தான் கோவிந்தராஜ். கருணாபுரத்தைச் சேர்ந்த இவர், துவக்கத்தில் மரத்தடியில்தான் பாக்கெட் சாராயம் விற்றுள்ளார்.
கன்னுக்குட்டியின் இலக்கே, சுமை தூக்குவோர், கட்டுமானத் தொழிலாளர்கள் என கூலித் தொழிலாளர்கள்தான்... 50 ரூபாய் என மலிவு விலை போதை கிடைத்ததால், விற்பனை அமோகமாகியிருக்கிறது கன்னுக்குட்டிக்கு.
வசூல் கொழித்ததால், வீட்டின் அருகிலேயே ஒரு குடிசை அமைத்து, குடோனாகவும் கடையாகவும் மாற்றியுள்ளார். மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் என குடும்பத்தினரும் இந்தத் தொழிலில்தான் உள்ளனர். கோவிந்தராஜனுக்கு குடிப்பழக்கம் இல்லை என்பதால் தம்பி தாமோதரன்தான், சாராயத்தை குடித்து பார்த்து ஆய்வு செய்து வாங்குவாராம்.
பாண்டிச்சேரியிலிருந்தும் பாக்கெட் சாராயம் வந்து சேருமாம் கன்னுக்குட்டிக்கு. இவரது சப்ளையர்களில் ஒருவரான சின்னத்துரை, கடந்த 17 ஆம் தேதி மாதேஷ் என்பவரிடமிருந்து மெத்தனால் வாங்கியுள்ளார். மாதேஷ், ஆந்திராவில் உள்ள கெமிக்கல் நிறுவனங்களில் இருந்து வாங்கி வருவார். இதை கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜூக்கு சப்ளை செய்துள்ளார் சின்னத்துரை. இதை வழக்கம்போல குடித்து டெஸ்ட் செய்த தாமோதரன், வழக்கத்தைவிட மிக காட்டமாக இருப்பதாகவும் கெட்டுப் போயிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், உயர் ரக சரக்கு என கூறி விற்குமாறு கூறியுள்ளார் சின்னத்துரை. வழக்கமாக சப்ளை செய்ததும் முழு பணத்தையும் வசூலிக்கும் சின்னத்துரை, தனது மெத்தனால் விற்பனை வரலாற்றிலேயே முதல்முறையாக, முழு தொகையையும் வாங்காமல் முன்பணம் மட்டுமே வாங்கியிருக்கிறார்.
விஷ சாராய மரண வழக்கில், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், இவர்களுக்கு மெத்தனால் விற்ற சின்னதுரை, இவருக்கு மெத்தனால் விற்ற புதுச்சேரி மாதேஷ், சின்னதுரையின் நண்பர்கள் ஜோசப் ராஜா, மதன் குமார் என 7 பேரை அடுத்தடுத்து கைது செய்துள்ளது சிபிசிஐடி.