கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திரபதிவுத் துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சப் ரிஜிஸ்டராக சங்கீதா (34) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர், பத்திரப்பதிவு செய்பவர்களிடம் தொடர்ந்து ஜிபே, போன் பே மூலமாகவும் நேரடியாகவும் லஞ்சம் பெறுவதாக கடலூர் மாவட்ட லஞ்சஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன் திருவேங்கடம் ஆய்வு குழு தலைவர் முருகன் மற்றும் போலீசார் திடீரென அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 8.10 லட்சம் பணம் இருந்தது. இந்த பணம் எப்படி வந்தது என லஞ்சஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது உளுந்தூர்பேட்டையில் உள்ள திருப்பதி திருமலை நகரில் 10 மனைகள் வாங்கி தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து வந்துள்ளார் சங்கீதா. இதுவரை 42 லட்சம் கொடுத்துள்ள நிலையில், நேற்று மாலை ரூ.3.50 லட்சத்தை வீட்டுமனை நிறுவன உரிமையாளர் குமார் என்பவரிடம் கொடுக்கும் போது லஞ்சஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் சப் ரிஜிஸ்டர் சங்கீதாவையும் அவருக்கு உதவியாக இருந்த அதே அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர் உதயகுமார் (37) ஆகிய இருவரையும் பிடித்து அலுவலகத்தில் வைத்து 9 மணி நேரமாக விசாரணை நடத்தி சம்பந்தமாக ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.