'விசாரணை முடிவதற்கு முன்பாகவே டிஜிபி தீர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று எவ்வாறு அவர் கூறுகிறார்' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த 5 நாட்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தன்னுடைய மகள் கடைசியாக 10 ஆம் தேதி தன்னிடம் பேசியதாக தாயார் கூறுகிறார். 13 ஆம் தேதி மாணவி இறந்துவிட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே மாணவி இறந்து விட்டதாக தாயார் தெரிவிக்கிறார். மாணவி இறந்த நாளும் மாணவியின் தாயார் சொல்லும் நாளும் வேறுபடுகிறது.
விசாரணை முடிவதற்கு முன்பாகவே டிஜிபி தீர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று எவ்வாறு அவர் கூறுகிறார். அந்த தாய் மிரட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் சந்தேகம் உள்ளது. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மட்டுமே இந்த சம்பவம் (வன்முறை) ஏற்பட்டு உள்ளது.
இன்று கடலூர் மாவட்டதில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை முன்னாள் மாணவன் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்துள்ளார். நட்பு ரீதியில் அந்த பிறந்தநாள் விழாவிற்கு சென்ற மாணவியை மிரட்டி 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என நீண்ட நாட்களாக தெரிவித்து வருகிறேன். அது தற்போது அதனை வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது.
தமிழகத்தில் மாணவிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அரசின் உளவுத்துறை செயலற்று உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும், அதன் கீழ் இயங்கும் காவல்துறையும் தான்.
திமுக சொன்னதை எப்போதும் செய்தது இல்லை. தேர்தல் நேரத்தில் வெற்றி பெற வாக்குறுதிகளை சொன்னார்கள் தற்போது அதனை காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். முதல் கையெழுத்து நீட் ரத்து என தெரிவித்தனர். தற்போது வரை எதுவும் செய்யவில்லை. பல உயிர்கள் தான் பறிபோனதுதான் மிச்சம்” என்று தெரிவித்தார்.