அண்ணனுக்கு உதவி செய்யாத ஸ்டாலின் நாட்டுமக்களுக்கு எப்படி உதவி செய்வார் என முதல்வர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கோவை சத்தியமங்கலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ”ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் ஸ்டாலினும் அழகிரியும். அவருக்கு கட்சியில் வாய்ப்பு அளிக்காமல் உள்ளவர்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்கள். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதன் சேர்மேன் தற்போது ஸ்டாலின்,பின்னர் உதயநிதி ஸ்டாலின்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “ கோவை ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, விவசாயிகளின் பம்பு கட்டணம் குறைக்க விவசாயிகள் போராடியபோது அவர்களை சுட்டுக் கொன்றவர்கள் திமுகவினர்.திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மின்வெட்டு வரும். திமுகவில் உள்ள அனைவரும் ரவுடிகள். நமது கட்சியில் உள்ளவர்கள் உண்மையில் விவசாயிகள்.”என்றார்
இதனைத்தொடர்ந்து பேசிய அவர் “ அனைத்து துறைகளிலும் விருதுபெற்ற ஒரே மாநிலம் தமிழகம். கிராமங்களில் ஏழை மக்களுக்கு குடிநீர் இணைப்புகளை வழங்கி உள்ளோம். தாளவாடி மலைப்பகுதியில் மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறோம்.” என்றார்.