நீக்கப்பட்டு 40 நாட்களில் பதவி... விஜயின் அறிக்கைதான் காரணமா? தளவாய் சுந்தரம் கடந்து வந்த பாதை!

தளவாய் சுந்தரத்தின் பதவி பறிக்கப்பட்ட 40 நாட்களில் மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டு, முன்பு அவர் வகித்த அதே பதவியை அவருக்கு மீண்டும் வழங்கி உள்ளது அதிமுக. இது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. இதன் பின்னணி என்ன? அறியலாம் இங்கே...
தளவாய்  சுந்தரம்
தளவாய் சுந்தரம்கோப்புப்படம்
Published on

ஆர்.எஸ்.எஸ் பேரணியைத் தொடங்கிவைத்த காரணத்தால் அதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் ஏற்கெனவே வகித்து வந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர் பொறுப்புகளும் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. பதவி பறிக்கப்பட்ட 40 நாள்களில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு, அதே பதவியை வழங்கியிருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.

தளவாய் சுந்தரம் - எடப்பாடி பழனிசாமி
தளவாய் சுந்தரம் - எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவராக இருந்தாலும், அவர் அதிமுகவில் முதன்முதலாகப் பதவி பெற்றது தலைநகரான சென்னையில்தான். அடிப்படையில் வழக்கறிஞரான தளவாய் சுந்தரத்துக்கு தென் சென்னை வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பு 1989-ம் ஆண்டு கிடைத்தது.

தொடர்ந்து வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு உயர்ந்தார். பின்னர் சசிகலா குடும்பத்துடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, உயர்நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞராக உயர்ந்தார்.

1996-ல் ராஜ்யசாபா எம்.பியாகவும் அதிமுக தலைமையால் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, 2001-ல் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானதோடு, பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். தொடந்து, பல துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல், கட்சியிலும், அம்மா பேரவை மாநிலச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என பத்து ஆண்டுகளில் விறுவிறுவென உச்சத்துக்குப் போனார்.

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால், சசிகலா குடும்பம் ஓரம் கட்டப்பட்டபோது, தளவாய் சுந்தரமும் ஓரம் கட்டப்பட்டார். பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பிறகு மீண்டும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் என கட்சி செல்வாக்குமிக்கவராக மாறினார்.

தளவாய்  சுந்தரம்
திருச்செந்தூர்: தாக்கிய பின் பாகனை எழுப்ப முயன்ற தெய்வானை... நடந்தது என்ன? – வனத்துறை விளக்கம்

ஆனால், 2016 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக தோல்வியைத்தழுவ மீண்டும் அவரின் பதவி பறிபோனது. தர்மயுத்த காலத்தில், சசிகலா, டிடிவி பக்கம் நின்றவருக்கு சசிகலா டெல்லி சிறப்புப் பிரதிநிதி பொறுப்பை வழங்கினார். பின்னர் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடிக்க இ.பி.எஸ் பக்கம் நின்று, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனார். தொடர்ந்து, இ.பி.எஸ்ஸின் குட் புக்கில் இடம் பிடித்து அமைப்புச் செயலாளராகவும் ஆனார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் வெற்றி பெற்றார். தென் மாவட்டங்களில் இ.பி.எஸ்ஸின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகவும் விளங்கினார். இந்த நிலையில்தான், கடந்த எட்டாம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணியைத் தொடங்கிவைத்த காரணத்தால், அ.தி.மு.கவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் தளவாய் சுந்தரம்.

தளவாய்  சுந்தரம்
கூகுள் மேப் பார்த்து சென்றபோது ஆற்றில் சிக்கிய ஐயப்ப பக்தர்! 5 மணி நேரமாக சேற்றில் தவித்த பரிதாபம்!

அதையடுத்து, மேற்கு மாவட்டச் செயலாளர் ஜான் தங்கத்திடமே கிழக்கு மாவட்டப் பொறுப்பையும் சேர்த்து ஒப்படைத்தது கட்சித் தலைமை. இந்தநிலையில் நேற்று மீண்டும் அவரைக் கட்சியில் இணைத்து, அவர் வகித்த பொறுப்புகளையும் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 40 நாள்களுக்குள் எப்படி இந்த மனமாற்றம் கட்சி வட்டாரத்தில் பேசினோம்.

``நாற்பது நாள்கள் எல்லாம் இல்லை. அவர் நீக்கப்பட்டு இரண்டு நாள்களிலேயே அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. அவர் இப்போது மட்டுமல்ல, தொடர்ச்சியாக தொகுதி எம்.எல்.ஏ என்கிற அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் பேரணியைத் தொடங்கி வைத்துக்கொண்டுதான் இருக்கிறார். அதை எடப்பாடியாருக்கு தெரிவித்து சமாதானமும் செய்துவிட்டார். நீக்கிவிட்டு உடனடியாக மீண்டும் சேர்த்தால் சரியாக இருக்காது என்பதால்தான், கொஞ்சம் இடைவெளிவிட்டு இப்போது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அவர் மா.செவாக இல்லாவிட்டாலும், கன்னியாகுமரி அதிமுகவில் அவர்தான் அதிகாரம் செய்துவந்தார். ஜான் தங்கமே இவரிடம்தான் அனைத்து விஷயங்களையும் கேட்டுச் செய்துகொண்டிருந்தார். நேற்று அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்கிற விஜய்யின் அறிவிப்பு வெளியானது. அதை டைவர்ட் செய்யும் நோக்கத்திலேயே அவர் மீண்டும் இணைக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது.

தளவாய் சுந்தரம், எடப்பாடி பழனிசாமி
தளவாய் சுந்தரம், எடப்பாடி பழனிசாமிஎக்ஸ் தளம்

எல்லாவற்றையும்தாண்டி, மீண்டும் பாஜகவுடன் கூட்டணிக்குப் போகலாமா என்றே இ.பி.எஸ் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அதனால், தளவாய் கலந்துகொண்டது எல்லாம் பெரிய விஷயமில்லை என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார். இன்னும் கொஞ்சம் இடைவெளி விட்டால் தளவாய் வேறு ஏதாவது குட்டையைக் குழப்பினால் அதனால்தான் உடனடியாக அறிவித்துவிட்டார்’’ என்கிறார்கள்

தளவாய்  சுந்தரம்
வேலூர்: யானை தந்தத்தை விற்க முயற்சி - பாஜக பிரமுகர் உட்பட 9 பேரிடம் வனத்துறையினர் விசாரணை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com