‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ தூக்கிட்டு கொண்ட பெண் !வாடகை வீட்டு உரிமையாளர் கழிவறை சாவி கொடுக்காததால் அதனை பயன்படுத்த முடியாமல் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் ரவி-லாவண்யா தம்பதியினர். ரவி ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு ஆசிரியர் வேலை கிடைக்காத காரணத்தால் குடும்ப வறுமை கருதி வேலூர் லட்சுமி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு டீ கடையில் டீ மாஸ்ட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லாவண்யா வீட்டில் இருந்தபடியே தனது 2 மகன்களை வளர்த்து வருகிறார். கண்ணமங்கலத்தை பூர்வீகமாக கொண்ட ரவி-லாவண்யா தம்பதியினர் அடுக்கம்பாறையில் கடந்த சில ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 வருடமாக அடுக்கம்பாறை புது தெருவில் உள்ள ஆரணியை சேர்ந்தவரது வீட்டில் மாதம் 1500 ரூபாய் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். ஆனால் வீட்டின் உரிமையாளர் கூடுதலாக வாடகை கொடுத்தால் மட்டுமே 2 கழிப்பறைகளின் சாவியை கொடுப்பதாக கூறியுள்ளார். ரவி-லாவண்யா தம்பதியிடம் போதிய வருவாய் இல்லாததால் கூடுதல் வாடகையை கொடுக்க முடியவில்லை.
வீட்டின் உரிமையாளர் கழிப்பறைகளின் சாவியை கொடுக்காததால் லாவண்யா தாற்காலிகமாக ஓலை மூலம் தடுப்பு அமைத்து குளிப்பதற்கும், மலம் கழிக்க திறந்த வெளியையும் பயன்படுத்தி வந்துள்ளார். கழிப்பறை இல்லாதது குறித்து லாவண்யா தனது கணவர் ரவியிடம் பல முறை கூறியும் தீர்வு கிடைக்காததாலும் திறந்த வெளியில் குளிப்பதாலும் மன முடைந்துபோன லாவண்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வி என்ற பெண் கூறும் போது, அடுக்கம்பாறை பகுதியில் உள்ள வீடுகளில் கழிப்பறை இல்லாததால் நாங்கள் திறந்த வெளியிலையே பயன்படுத்தி வருகிறோம். மேலும் கழிவு நீர் கால்வாய் வசதியும் இல்லாததால் கழிவு நீர் தெருக்களில் செல்வதால் குழந்தைகளுக்கு நோய் வருகிறது. மேலும் கழிப்பறை இல்லாத காரணத்தினாலேயே லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் லட்சுமி என்பவர் கூறும் போது வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால் இரவில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை செல்கிறோம். காலை 6.00 மணிக்கு மேல் ஆட்கள் நடமாட்டம் இருப்பதால் இயற்கை உபாதைகளை கழிக்க செல்வது மிக சிரமம் என்றும் கூறினார். மேலும் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் வீட்டில் சிறிய பள்ளம் தோண்டி அதில் தேங்கும் கழிவு நீரை தினமும் கையால் அகற்றுவதால் எங்களுக்கு காய்ச்சல் வருவதாகவும் கூறினார். ஆகவே அரசு எங்களுக்கு கழிவு நீர் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும் அல்லது பொது கழிப்பறை கட்டிகொடுக்க வேண்டும். ஒரு வேலை பொது கழிப்பறை இருந்திருந்தால் லாவண்யா உயிரிழந்திருக்கமாட்டார் என்றும் கூறினார்.
இப்பகுதி முன்னாள் வார்டு உறுப்பினர் ராஜி என்பவர் கூறும் போது இப்பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அன்று முதலே இவர்கள் அரசுக்கு ஆண்டு தோறும் வீட்டு வரி கட்டி வருகின்றனர். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. பட்டா இல்லாததால் அரசின் அனைத்து சலுகைகளும் மறுக்கப்படுகிறது. இது குறித்து பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார். எனவே அடுக்கம்பாறை பகுதியில் பெண்களின் நலனுக்காகவும் சுகாதாரத்தை மேம்படுத்ததும் லாவண்யா போன்றவர்களின் துயர் துடைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பொது கழிப்பறை கட்டித்தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.